/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் சபாநாயகர் மகன் மீதான விபத்து வழக்கு மீண்டும் விசாரிக்க கோரி அ.தி.மு.க. நிர்வாகி மனு
/
முன்னாள் சபாநாயகர் மகன் மீதான விபத்து வழக்கு மீண்டும் விசாரிக்க கோரி அ.தி.மு.க. நிர்வாகி மனு
முன்னாள் சபாநாயகர் மகன் மீதான விபத்து வழக்கு மீண்டும் விசாரிக்க கோரி அ.தி.மு.க. நிர்வாகி மனு
முன்னாள் சபாநாயகர் மகன் மீதான விபத்து வழக்கு மீண்டும் விசாரிக்க கோரி அ.தி.மு.க. நிர்வாகி மனு
ADDED : அக் 02, 2025 02:39 AM

சென்னை :திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதியூர் பிரிவு மேம்பாலம் அருகில், கடந்த 2016 ம் ஆண்டு அக்.4ல் 'ஸ்கோடா, மாருதி ஸ்விப்ட்' கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஸ்கோடா காரில் பயணித்த வீரசுரேகா என்ற பெண் பலியானார்.
இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த அவினாசி நீதிமன்றம், விபத்தை ஏற்படுத்திய, காரை ஓட்டிச் சென்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு, திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்பதால், மறு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த பெங்களூரு வா.புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் சார்பில், அவரது வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி தாக்கல் செய்த மனு:விபத்து ஏற்படுத்திய கார், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சொந்தமானது.
காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது, அவரது மகன் பிரவீன். குற்றம் சாட்டப்பட்ட பிரவீனின் அரசியல் பின்புலம் காரணமாக, பெருமாநல்லுார் போலீசார் பாரபட்சமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
காரில் கல்லுாரி மாணவியர் பயணித்தது ஏன் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கவில்லை என்பதால், அனைத்து கோணங்களிலும் மறு விசாரணை நடத்த கோரி அளித்த மனுவை, பெருமாநல்லுார் போலீசார் நிராகரித்து விட்டனர். இதில் உண்மையை வெளிக் கொண்டு வர, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், வரும் 3ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.