UPDATED : அக் 21, 2026 08:04 PM
ADDED : அக் 21, 2026 07:06 PM
சென்னை: பணி நிரந்தரம் கோரி, முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'நம்பிக்கை மையங்கள்' செயல்படுகின்றன. அதேபோல், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியில், மாநிலம் முழுதும், 2,500 பணியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், த.வெ.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, முதல்வர் விஜய்க்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் ஜெயந்தி கூறியதாவது:
ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக, த.வெ.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றக் கோரி, முதல்வரை சந்திக்க பலமுறை முயன்றோம். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, 20 ஆண்டுகளாக பணியாற்றும் எங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
