விமான பயணியருக்கு உதவும் வகையில் ஏர்போர்டில் சிறப்பு திட்டம் தொடக்கம்
விமான பயணியருக்கு உதவும் வகையில் ஏர்போர்டில் சிறப்பு திட்டம் தொடக்கம்
UPDATED : செப் 16, 2026 11:37 PM
ADDED : செப் 16, 2026 09:54 PM
சென்னை:''சென்னை விமான நிலையத்தில் பயணியருக்கு வழிகாட்டி, பயணத்தை எளிமையாக்கும் வகையிலும், அவர்களின் தேவைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கிலும், இன்று முதல் அக்., 10ம் தேதி வரை 'யாத்திரி சேவா அபியான்' எனும் சிறப்பு பயணியர் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் பிரதான விமான நிலையங்களில் 'யாத்திரி சேவா அபியான்' என்ற பயணியருக்கு முன்னுரிமை தரும் திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக இன்று தொடங்கி அக்., 10ம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும், அனுபவமிக்க 125 பணியாளர்கள் உடனடியாக் களத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பார்க்கிங் சிக்கல்கள், உடைமைகளைப் பாதுகாப்பாக கையாளுதல், பாதுகாப்பு சோதனைகளில் கடைபிடிக்க வேண்டிய எளிய நடைமுறைகள் மற்றும் 'டிஜி யாத்ரா' செயலியை பயன்படுத்தி, வரிசையில் காத்திருக்காமல் விமான நிலையத்திற்குள் நுழைவது உள்ளிட்ட முக்கிய சேவைகள் குறித்து, இந்த 24 நாட்களும் பயணியருக்குத் தீவிரமாக வழிகாட்டப்படவுள்ளது.
மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் விமான நிலையத்தின் இரண்டாவது சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களிலிருந்து பயணியர் நேரடியாக முனையத்திற்கு வந்து செல்ல ஏதுவாக, 'ஏரோ பிரிட்ஜ்' எனும் பாலங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் கூறினார்.
