அனைத்து சமூகத்தினரும் ஆதரவு :தி.மு.க., ராஜா அன்பழகன் பெருமை
அனைத்து சமூகத்தினரும் ஆதரவு :தி.மு.க., ராஜா அன்பழகன் பெருமை
ADDED : ஏப் 17, 2026 05:20 PM

தி.நகர்: ''அனைத்து சமூகத்தினரும் ஆதரவு தருவதால், தி.நகரில் நிச்சயம் வெற்றி பெறுவேன்,'' என, தி.மு.க., வேட்பாளர் ராஜா அன்பழகன் தெரிவித்தார்.
தி.நகரில், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க., வேட்பாளர் ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று, அசோக் நகர் காமராஜர் சாலை, பல்லவன் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையோர வியாபாரிகளிடம் தி.மு.க., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, பிரசாரம் செய்தார்.
அவருடன், பகுதி செயலர்கள் ஏழுமலை, மணி, தலைமை பொதுகுழு உறுப்பினர்கள் ஜானகிராமன், பழனி, வட்ட செயலர் செல்வகுமார், லோகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது:
போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகரில் 2 கி.மீ., நீளத்திற்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.நகர் தொகுதியில் 21 கி.மீட்டருக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளதால், மழை வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து சமூகத்தைச் சேர்ந்தோரும் தி.மு.க., ஆதரவாக உள்ளனர். அதனால், நிச்சயம் வெற்றி பெறுவேன். த.வெ.க., வேட்பாளர், தி.நகரில் ஒரு நாள் கூட தங்கியதில்லை.
தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் தான் போட்டி; மூன்றாவது இடம் யாருக்கு என்பதற்கு தான் த.வெ.க., போட்டியிடுகிறது.
மக்கள் பணியை அவர்ளுடன் சேர்ந்து செய்வேன். என்னை நம்பி ஓட்டளித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தி.நகரை முன்மாதிரி பகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
