/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : நவ 02, 2025 12:44 AM

தாம்பரம்: 'தாம்பரம் கவுல்பஜாரில் கஞ்சா கும்பலின் அட்டகாசத்தால், சாலையில் நடக்கவே பயமாக உள்ளது' என, புறநகர் கிராம சபை கூட்டத்தில், பெண்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர்.
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, புறநகர் ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. கவுல்பஜார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், கஞ்சா கும்பலின் அட்டகாசத்தால் சாலையில் நடப்பதற்கே பயமாக உள்ளது.
அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தும், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என, கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
பொழிச்சலுார் ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு, வார்டு உறுப்பினர்கள் வருவதே இல்லை. அவர்கள் வராத நிலையில், குறைகளை யார் சரிசெய்வது என, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, 'பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொழிச்சலுார் ஊராட்சி மக்களின் வசதிக்காக, பம்மலில் இருந்து குடிநீர் குழாய் கொண்டுவரப்பட்டுள்ளது.
'விரைவில், பொழிச்சலுாருக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி கூறினார்.
முடிச்சூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஊதியத்தை உயர்த்தி, மாதந்தோறும், 2ம் தேதி வழங்க வேண்டும் என, துணை தலைவர் விநாயகத்தை நோக்கி, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, துணை தலைவரிடம் இருந்து சரியான பதில் வராததால், கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஒருவர், 'துாய்மை பணியாளர்களுக்காக நான் போராடுவேன்' என்றார்.
இதனால், துணை தலைவருக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், துாய்மை பணியாளர்கள், துணை தலைவருக்கு எதிராக திரும்பினர். இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

