/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டணி யாருடன்? தீவிர ஆலோசனையில் வாசன்
/
கூட்டணி யாருடன்? தீவிர ஆலோசனையில் வாசன்
UPDATED : ஜன 16, 2024 10:22 AM
ADDED : ஜன 16, 2024 02:43 AM

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அல்லது பா.ஜ., வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்க, த.மா.கா., தலைவர் வாசன் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
வாசன் தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாகவும், உரிமை மீறல் விசாரணை குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பா.ஜ., கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் வாசனுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க, பிரதமர் மோடி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தம்பிதுரை, ரவீந்திரநாத், பா.ம.க., தலைவர் அன்புமணி போன்றவர்களும் மத்திய அமைச்சர் பதவியை கேட்டதால், வாசனுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணி வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்தால், பா.ஜ., அமைச்சரவையில், வாசனும் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் 22ம்தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் வாசன் பங்கேற்க வேண்டும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வாசன் கருதுகிறார். அதே வேளையில், அ.தி.மு.க.,வுடன் நெடுநாள் உறவு நீடிப்பதால், அக்கட்சியை விட்டுக் கொடுக்காமல், பா.ஜ., - அ.தி.மு.க., உறவை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற எண்ணமும், வாசனுக்கு இருக்கிறது.
இன்னும் சில வாரங்களில், அதற்கான சந்தர்ப்பம் ஏதும் அமையாமல் போனால், அடுத்த மாதம், கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, அதில் ஓட்டெடுப்பு நடத்தி, கூட்டணி குறித்து முடிவு செய்யலாம் என்றும், வாசன் திட்டமிட்டுள்ளார்.
- நமது நிருபர் -