/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அசைவ விருந்தில் மோசடி அம்பத்துார் ஹோட்டலுக்கு அபராதம்
/
அசைவ விருந்தில் மோசடி அம்பத்துார் ஹோட்டலுக்கு அபராதம்
அசைவ விருந்தில் மோசடி அம்பத்துார் ஹோட்டலுக்கு அபராதம்
அசைவ விருந்தில் மோசடி அம்பத்துார் ஹோட்டலுக்கு அபராதம்
ADDED : செப் 22, 2024 06:48 AM
திருவள்ளூர், : திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயலைச் சேர்ந்த பாலமுருகன் மகள் ஜெசிகா ஸ்ரீ என்பவருக்கு, 2023, அக்., 10ல் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக, அம்பத்துாரில் உள்ள 'திருவிழா' என்ற ஹோட்டலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உறவினர்களுக்கு விருந்து அளிக்க, அதே ஹோட்டலில் 230 பேருக்கு அசைவ உணவு 'ஆர்டர்' செய்யப்பட்டு, அதற்கான கட்டணமும் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி அன்று, முதல் பந்தியில் அமர்ந்த 90 பேருக்கு மட்டுமே முறையாக அசைவ உணவு வழங்கப்பட்டது. அதன் பின் வந்தோருக்கு திருப்தியான சாப்பாடு வழங்கவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து பாலமுருகன் கேட்டபோது, அனைவருக்கும் முறையாக உணவு பரிமாறப்பட்டதாக, ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்தபோது, உணவு பரிமாறுவதில் மோசடி செய்தது தெரிந்தது.
இதுகுறித்த ஆதாரத்துடன், பாலமுருகன் மனைவி நித்தியசெல்வி, அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தபோது, உணவுக்கான தொகையை திருப்பி தருவதாக ஹோட்டல் உரிமையாளர் உறுதி அளித்து, திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து நித்தியசெல்வி, உணவுக்காக செலவு செய்த 1.39 லட்சம் ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரி, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தார்.
திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவி லதா மகேஸ்வரி விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:
புகார்தாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்ததில், ஹோட்டல் நிர்வாகம் மோசடி செய்தது நிரூபணமாகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வழங்கப்படாத உணவுக்கான தொகை 57,860 ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக 10,000 என மொத்தம் 1.67 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இந்த தொகையை, ஆறு மாதங்களுக்கு வழங்க தவறினால் 9 சதவீதம் வட்டியுடன் மொத்த தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.