/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனதை இசையால் வருடிய அனாஹிதா, அபூர்வா
/
மனதை இசையால் வருடிய அனாஹிதா, அபூர்வா
ADDED : ஜன 05, 2026 06:10 AM

இ சை உணர்வை மனமுவந்து தரும் சகோதரியர் அனாஹிதா, அபூர்வாவின் கச்சேரி, மயிலாப்பூர் வித்யா பாரதி கல்யாண மண்டபத்தில் நடந்தது. 'எல்லே இளங்கிளியே' என்ற ஆண்டாளின் திருப்பாவை பாடலுடன் துவங்கினர்.
பேகடா ராகம், ரூபக தாளத்தில் அமைந்த இப்பாடலில், உறங்கும் தோழியை எழுப்பும் நயம் போல், சகோதரியரின் குரல் இனிமையையும் கேட்டு, சபையே மெய்சிலிர்த்தது.
தொடர்ந்து, அன்னமாச்சாரியார், பவுளி ராகம், ஆதி தாளத்தில் இயற்றிய 'ஸ்ரீமன் நாராயணா' பாடலின் பக்தி ரசத்தை ஊற்றினர்.
அடுத்ததாக, ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கம்பீர நாட்டை ராகம், ஆதி தாளத்தில் 'ரங்கநாதம்' பாடலை எடுத்துக் கொண்டனர். பல்லவியில் முதல் மற்றும் இரண்டாம் கால வேகத்தில், சகோதரியர் மாறி மாறி பாடிய கற்பனை ஸ்வரங்கள், அவர்களின் அபாரமான இசை பசியையும், தாள ஞானத்தையும் பறைசாற்றியது.
கச்சேரியின் சிகரப்பகுதியாக, தியாகராஜ சுவாமிகளின் கம்பீரமான காம்போஜி ராகம், ஆதி தாளத்தில் அமைக்கப்பட்ட 'ஓ ரங்கசாயி' பாடல்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்காக உருகிப் பாடும் இந்தப் பாடலில், 'பூலோக வைகுண்டம்' என்ற வரியில், நிரவல் செய்தது கேட்க இனிமையாக இருந்தது. ராகத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் ஆலாபனையில் கொண்டு வந்த விதம், காம்போஜி ராகத்தின் அழகை முழுமையாகக் காட்டியது.
கச்சேரியின் சிறப்பம்சமாக, 'சாரங்கனை ரங்கனை' என்ற பல்லவியை சுத்த சாரங்கா ராகத்தில், திஸ்ர ஜாதி திரிபுடை தாளத்தில் வழங்கினர். பிருந்தாவன சாரங்கா மற்றும் சாரங்கா ராகங்களின் சங்கமமாக இது ஒலித்தது.
பின், கன்கோபாத்ராவின் அபாங் பாடலான, 'அகா வைகுண்டிச்சயா ராயா'வை, 'வைகுண்டத்தின் அரசனே' என்று மராத்தி மொழியில் உருகும் பாடல், சிந்து பைரவி ராகத்தின் கருணையுடன் இணைந்து, அனைவரின் மனதையும் வருடியது.
சகோதரியரின் குரலுக்கு அரணாக சாயி ர க்ஷித் தன் வயலினில், ராகங்களின் சாரத்தை மிக அழகாக வெளிப்படுத்தினார். மிருதங்கம் விஜய் நடேசன், கஞ்சிரா புருஷோத்தமன் ஆகியோரின் தனி ஆவர்த்தனம், கம்பீரமான நிறைவை கொடுத்தது. இவர்களுக்கு இடையேயான புரிதலும், ஊக்கப்படுத்திய விதமும், கச்சேரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
- ரா.பிரியங்கா

