/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழமையான சதிகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு
/
பழமையான சதிகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு
பழமையான சதிகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு
பழமையான சதிகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு
ADDED : அக் 18, 2024 12:18 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் சங்கரா பல்கலை தமிழ்த் துறை உதவி பேராசிரியர்கள் அன்பழகன், அப்பாதுரை ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
அங்கு, 500 ஆண்டுகள் பழமையான சதிகல் சிற்பம் கிடைத்தது.
இதுகுறித்து பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:
போரில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரனின் மனைவி, துக்கம் தாங்காமல் கணவரின் சிதையில் பாய்ந்து இறக்கும் நிலையில், அவளின் நினைவாக நடப்படுவது சதிகல். இதில் 22 செ.மீ., உயரம் மட்டும் வெளியில் தெரிந்த சிற்பத்தை தோண்டி எடுத்து ஆய்வு செய்தோம்.
இச்சிற்பம் 12 ஆண்டுகளுக்கு முன், தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வழிபாட்டிலும் இருந்துள்ளது.
கல்வெட்டு எழுத்துக்கள் இல்லை. 74 செ.மீ உயரமும், 38 செ.மீ., அகலமும் கொண்டது.
இதில், ஒரு வீரனும், அவன் மனைவியும், புடைப்பு சிற்பமாக உள்ளனர். வீரனின் இடதுகை அம்பு ஒன்றை உயர்த்திப் பிடித்திருக்க, அவனது வலது கை வில்லின் நாணை இழுத்துப் பிடித்துள்ளது.
வீரனின் தலையில் உள்ள கொண்டை மேல்நோக்கியும் பெண்ணின் கொண்டை வலது பக்கமாகவும் உள்ளது.
அணிகலன், ஆடைகள் பற்றி தெளிவாக அறிய முடியவில்லை. வீரனின் வலது கையை அவனது மனைவி, தன் இடக்கரம் கொண்டு பிடித்துள்ளாள். இச்சதிகல்லில் உள்ள பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது, கணவரின் சிதையில் புகுந்து உயிர் நீத்திருக்கலாம் என தெரிகிறது. காலம் கி.பி. 15ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.