ADDED : ஜூன் 22, 2025 12:23 AM
சென்னை, இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம், 168 பேருடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
நடுவானில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணிக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சக பயணியர், உடனடியாக விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். அவர்கள், விமானிக்கு தகவல் தந்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின், விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணியின் நிலைமை குறித்து, விமானி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், மருத்துவ குழு தயார் நிலையில் இருந்தது. விமானம், சென்னையில் தரையிறங்கியதும் மருத்துவ குழு விமானத்தில் ஏறி, பயணியை சோதனை செய்தனர். ஆனால் அவர், விமானத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரது உடலை கைப்பற்றிய சென்னை விமான நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
