/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 கோடி மோசடி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
/
ரூ.10 கோடி மோசடி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : ஏப் 08, 2025 01:32 AM

ஆவடி, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோகன், 59. இவர், பூந்தமல்லி, முத்து நகரில் 'ஸ்ரீ மார்க் ஹியூமன் ரிசோர்ஸ்' என்ற பெயரில், பெரு நிறுவனங்களுக்கு பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை பணியமர்த்தி தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கு, ஜி.எஸ்.டி., மற்றும் ஐ.டி., தாக்கல் செய்யும் வி.கே.அசோசியேட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் கிருஷ்ணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர், அசோகனின் நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி., வரியை குறைத்து கட்டுவதற்கு தன்னிடம் சி.ஏ., படித்தவர்கள் இருப்பதாக கூறி, கிருஷ்ணகுமார் அவரது நண்பர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து, நண்பர்களின் பெயரில் 19 போலி நிறுவனங்களை உருவாக்கி, அவரது நண்பர் இளங்கோவன் என்பவர் வாயிலாக பெற்று, அசோகனின் நிறுவன கணக்கில் இருந்து வி.கே., அசோசியேட்ஸ் மற்றும் 19 போலி நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாய் அனுப்பி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், கடந்த ஜன., 21ம் தேதி அசோகன் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த தனிப்படை போலீசார், மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணகுமார் தம்பதி மற்றும் இளங்கோவன் ஆகியோரை, கடந்த 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன், 39, என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

