/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூடப்பட்ட அம்மா உணவகம் மீண்டும் திறக்க வேண்டுகோள்
/
மூடப்பட்ட அம்மா உணவகம் மீண்டும் திறக்க வேண்டுகோள்
ADDED : அக் 07, 2024 01:46 AM

சென்னை:பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதாக அறிவிப்பு பதாகை வைத்து 8 மாதங்களாகியும், இன்னும் அம்மா உணவகத்தை திறக்காததால், எழும்பூர்வாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளில் ஏழை மக்களுக்காக, அம்மா உணவகத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதன் வாயிலாக ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் உணவு உண்டனர். மக்களிடையே இத்திட்டம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கூடுதலாக ஒரு அம்மா உணவகம் ஒவ்வொரு வார்டிலும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க., அரசு, கொஞ்சம் கொஞ்சமாக அம்மா உணவகங்களை மூடி வருகிறது.
இதனால் ஏழை, எளிய மக்கள் தனியார் உணவகங்களில் அதிக அளவில் பணம் செலவு செய்து, உணவு உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எழும்பூர் பகுதிவாசிகள் கூறியதாவது:
எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில், தினசரி நுாற்றுக்கணக்கானோர் உணவு உட்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த, 8 மாதங்களுக்கு முன், பராமரிப்பு பணிக்காக உணவகம் தற்காலிகமாக மூடப்படுவதாக கூறி, மாநகராட்சியினர் அறிவிப்பு பதாகை அமைத்தனர்.
ஆனால், பராமரிப்பு பணி ஏதும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, பெரிய அளவில் இருந்த உணவகத்தை சுருக்கி, ஒரு பகுதியை ஏதோ அலுவலகத்திற்காக மடக்கி வைத்துள்ளனர்.
இதனால், இந்த உணவகத்திற்கு வரும் பொதுமக்கள், ஏமாற்றமடைகின்றனர்.
எனவே, மூடப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.