/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராணுவ அதிகாரியின் விமான பயணம் ரத்து
/
ராணுவ அதிகாரியின் விமான பயணம் ரத்து
ADDED : மார் 24, 2025 02:22 AM
சென்னை:துப்பாக்கி குண்டுடன், டில்லிக்கு செல்ல முயன்ற ராணுவ அதிகாரியின் விமான பயணம், ரத்து செய்யப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்சிங், 25; ராணுவ அதிகாரி. அவர், சில தினங்களுக்கு முன், சென்னை பரங்கிமலையில் உள்ள, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வந்துள்ளார்.
பயிற்சி முடித்து நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்தில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் டில்லிக்கு செல்ல வந்துள்ளார்.
அவரது உடைமைகளை 'ஸ்கேன்' செய்த போது, அபாயகரமான பொருள் இருப்பதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, அவரது கைப்பையை திறந்து பார்த்த போது, அதில், எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி குண்டு இருந்தது தெரியவந்தது.
ராணுவம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள், இதுபோன்ற பொருட்களை எடுத்துச் செல்லும் போது, துணை விமானியிடம் ஒப்படைத்துவிட்டு, இறங்க வேண்டிய இடத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை சஞ்சய் சிங் பின்பற்றவில்லை. இதனால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், விமான நிலைய போலீசார், சஞ்சய் சிங், பயிற்சி பெறத்தான் வந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர்.
நேற்று அவரிடம் விமான நிலைய போலீசார் விசாரித்து, விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி, தவறுதலாக துப்பாக்கி குண்டு எடுத்துச்சென்றதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று விடுவிக்கப்பட்டார். துப்பாக்கி குண்டு, பரங்கிமலையில், காவல் துறை ஆயுத கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.