/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு 6 சிங்கங்கள் கொண்டுவர ஏற்பாடு
/
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு 6 சிங்கங்கள் கொண்டுவர ஏற்பாடு
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு 6 சிங்கங்கள் கொண்டுவர ஏற்பாடு
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு 6 சிங்கங்கள் கொண்டுவர ஏற்பாடு
ADDED : மார் 22, 2025 12:13 AM
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், அதிகப்படியான விலங்குகளை மற்ற பூங்காக்களில் இருந்து கொண்டு வருவதில், இப்பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில், காண்டாமிருகம் உள்ளிட்ட பல அரிய விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு பதில், இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்குகள், மற்ற பூங்காக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், பார்வையாளர்களை கவரும் 'லயன் சபாரி'க்காக கூடுதல் சிங்கங்களை கொண்டு வர, பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, 11 சிங்கங்கள் உள்ளன. இதில், லயன் சபாரியில் ஏழு சிங்கங்களும், கூண்டில் மூன்று சிங்கங்களும் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து, குஜராத்தில் இருந்து மூன்று சிங்கங்கள், சத்தீஸ்கரில் இருந்து மூன்று சிங்கங்கள் என, ஆறு சிங்கங்களை கொண்டுவர, திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தில் இருந்து ஒரு பெண் காட்டு கழுதை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, குஜராத் பூங்காவிற்கு ஒரு ஜோடி வெள்ளைப் புலி, சத்தீஸ்கருக்கு ஒரு ஜோடி காட்டுமாடு, மூன்று சருகு மான்கள், இரண்டு பெண் ஓநாய்கள் வழங்கப்பட உள்ளன.
வீராவிற்கு என்னாச்சு?
வண்டலுார் பூங்காவில் உள்ள, 11 சிங்கங்களில் 20 வயதான வீரா என்ற ஆண் சிங்கமும் ஒன்று. இந்த நிலையில், வயது மூட்பு காரணமாக, வீராவுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பூங்கா மருத்துவமனையில், தீவிர பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், வீராவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என, பூங்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.