/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலை வடிவங்களை தொலைக்க கூடாது ஓவியர் மருது பேச்சு
/
கலை வடிவங்களை தொலைக்க கூடாது ஓவியர் மருது பேச்சு
UPDATED : ஏப் 25, 2024 01:22 PM
ADDED : ஏப் 25, 2024 12:22 AM
சென்னை, ''நவீன கருவிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால், பழைய கலை வடிவங்களை தொலைக்க கூடாது,'' என, ஓவியர் மருது பேசினார்.
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், 'தமிழக ஓவிய மரபுகள்' எனும் பயிலரங்கம் நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
அதில், நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் பேசியதாவது:
அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்னோடியாகவும் ஒப்பற்ற சிறப்பை உடையதுமாக, ஓவியங்கள் உள்ளன. மனித நாகரிகம் துவங்கிய போது, தனக்கு விருப்பமான பொருட்களை, இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களை வைத்தே ஓவியங்களை வரைந்தனர். அடுத்து வளர்ச்சியடைந்த நிலையில் மண்பாண்டங்களின் மீது ஓவியங்களை வரைந்தான். மனிதனால் இடம் விட்டு இடம் நகர்ந்த இந்த பானை ஓவியங்களால், ஓவிய மரபு பரவலாக்கப்பட்படது. எழுத்துகளும் இலக்கியங்களும் தோன்றிய காலத்தில் சுவர் ஓவியங்கள் வளர்ந்தன. இதை சங்க இலக்கிய பாடல்கள் பதிவாக்கி உள்ளன. அதைத்தொடர்ந்து கற்சிலைகளும், கடவுள் ஓவியங்களும் வரையப்பட்டு வளர்க்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓவியர் மருது பேசியதாவது:
தற்போது, செயற்கை நுண்ணறிவின் உதவியுடனும் நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் உதவியுடனும் ஓவியங்களை வரையலாம். இனி வரும் காலம், மொழியைவிட, உலகம் முழுதும் காட்சிகளால் விளக்கும் காலமாக மாறும். அது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். என்றாலும், நம் குகை ஓவியங்களையும், கோவில் சுவர் ஓவியங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவை, நம் பண்பாட்டு தொடர்ச்சியையும், தனித்தன்மையையும் நிலைநாட்டும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளம் அருகே நாயக்கர்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவற்றை தொலைத்ததுபோல் தொலைக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் பாலுசாமி, செம்மொழி நிறுவன பதிவாளர் புவனேஸ்வரி மற்றும் ஆய்வு மாணவரகள் பங்கேற்றனர்.

