/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரும்பாக்கத்தில் அவதி; தி.நகரில் திணறல்
/
அரும்பாக்கத்தில் அவதி; தி.நகரில் திணறல்
UPDATED : அக் 16, 2024 01:02 AM
ADDED : அக் 16, 2024 12:10 AM

அரும்பாக்கத்தில் அவதி
வில்லிவாக்கம் பகுதியில், சிட்கோ நகரில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள், ஜெகன்நாத நகர், வில்லிவாக்கம் சுரங்கப்பாதைகள் நேற்று பெய்த மழையில், வழக்கம் போல் வெள்ளக்காடாக மாறியது. அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இப்பகுதியில் பல்வேறு தெருக்களில் மழைநீர் தேங்கி, குடியிருப்போர் அவதிப்பட்டனர். சூளைமேடு, சுப்பாராவ் நகர், வினோபாஜி முதல் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது.
சூளைமேடு, பாரி தெரு, கண்ணகி தெரு, பாரதியார் தெரு, வீரபாண்டிய நகர் பகுதிகள் தாழ்வாக இருப்பதால், வழக்கம் போல் மழைநீர் சூழ்ந்தது. திருமங்கலம் காவல் நிலையம் அருகில் பள்ளிச் சாலை முழுவதும் மழைநீரில் மூழ்கியது.
முறிந்து விழுந்த மரங்கள்
அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை, முத்துகிருஷ்ணன் தெருவில் சாலையோரத்தில் இருந்த மரம் நள்ளிரவில் முறிந்து விழுந்தது. அவ்வழியாக சென்ற அமைந்தகரை ரோந்து போலீசார், வெட்டி அகற்றினர்.
தி.நகரில் திணறல்
தி.நகர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், உஸ்மான் சாலையில் புது மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இதனால், உஸ்மான் சாலை மேம்பாலம் மூடப்பட்டதுடன், பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
, அதிக வாகன போக்குவரத்து உள்ள பர்கிட் சாலையில், நேற்று அதிகாலை சாலையோர மரம் சரிந்து விழுந்தது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தி.நகர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.