/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டாம் கட்ட 'மெட்ரோ'வுக்கு ரூ.2,000 கோடி கடனுதவி அளித்தது ஆசிய வளர்ச்சி வங்கி
/
இரண்டாம் கட்ட 'மெட்ரோ'வுக்கு ரூ.2,000 கோடி கடனுதவி அளித்தது ஆசிய வளர்ச்சி வங்கி
இரண்டாம் கட்ட 'மெட்ரோ'வுக்கு ரூ.2,000 கோடி கடனுதவி அளித்தது ஆசிய வளர்ச்சி வங்கி
இரண்டாம் கட்ட 'மெட்ரோ'வுக்கு ரூ.2,000 கோடி கடனுதவி அளித்தது ஆசிய வளர்ச்சி வங்கி
ADDED : டிச 16, 2025 06:54 AM

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி, இரண்டாம் கட்டமாக, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் -- சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - - சோழிங்கநல்லுார் என, மூன்று வழித்தடங்களில், 118 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 43 கி.மீ., துார சுரங்கப்பாதையில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மொத்தம், 63,246 கோடி ரூபாயில் நடக்கும் இந்த திட்டப்பணிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு, சர்வதேச நிதி அமைப்புகளிடமும் கடன் பெற்று, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுரங்கப்பாதை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மற்றும் ஆரம்ப கட்ட பணிகளை, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி, மூன்று கட்டமாக, 6,500 கோடி ரூபாய் கடன் வழங்க, 2022ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, 6,500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது. முதற்கட்டமாக, 2,905 கோடி ரூபாய் கடன் பெற்று, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டாவது கட்டமாக, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்பந்தம் டில்லியில் கையெழுத்தானது.
பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை அமைகின்றன. இந்த தடத்தில், சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள், இந்த கடன் வசதி வாயிலாக மேற்கொள்ளப்படும்.
வேகம் அதேபோல், மாதவரம் - சிறுசேரி தடத்தில் ஒரு பகுதியாக சோழிங்கநல்லுார் - சிறுசேரி சிப்காட் வரையிலான மேம்பால மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த கடன் வசதி வாயிலாக, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமெடுக்கும்.
மூன்றாவது கட்டமாக, 1,500 கோடி ரூபாய்க்கு மேல், ஆசிய வளர்ச்சி வங்கியுடன், கடன் வசதி பெறப்படும். இரண்டாம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்குவதிலும், கடன் வசதி கிடைக்கவும், மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தாமதமின்றி நடந்து வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், முதற்கட்டமாக பூந்தமல்லி பைபாஸ் - போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்க தயாராக உள்ளோம்.
இது தொடர்பான கடிதத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதையடுத்து, கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை துவங்குவோம். இரண்டாம் கட்ட அனைத்து மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும், 2028ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

