ADDED : ஜன 24, 2026 06:31 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
சென்னை வீராங்கனை ஏமாற்றம்
சென்னை: மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் இளம் வீராங்கனை தியா ரமேஷ், தகுதிச் சுற்றில் போராடித் தோல்வியடைந்தார்.
உலக டென்னிஸ் சங்கம் மற்றும் ஆஸ்திரேலியா டென்னிஸ் சங்கம் சார்பில், ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான, 'ஆஸ் திரேலிய ஓபன்' டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா சார்பில், சென்னையைச் சேர்ந்த தியா ரமேஷ், 16, போட்டியிட்டார். இதன் இறுதி தகுதிச்சுற்று ஆட்டத்தில் தியா ரமேஷ், ஜப்பானைச் சேர்ந்த 18 வயதான அசுனா இச்சியோகாவை எதிர்த்து மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஜப்பானின் அசுனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கு பதிலடி தரும் வகையில் தியாவும் சிறப்பாக விளையாடினார்.
போட்டி முடிவில் ஜப்பானின் அசுனாவிடம் 6 - 2, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில், தியா ரமேஷ் போராடித் தோல்வியடைந்தார்.
