ADDED : ஏப் 10, 2025 12:05 AM
பெரம்பூர், வியாசர்பாடியை சேர்ந்தவர் நாராயணன், 39; ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பரமேஸ்வரி என்பவர், நாராயணனிடம், ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் சென்று பணம் எடுக்க முற்பட்டார். அப்போது, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து சென்ற நபர் ஒருவர், மீண்டும் ஏ.டி.எம்., மையத்திற்குள் வந்தார்.
நாராயணன், 10,000 ரூபாய் எடுத்த போது, 'இது என்னுடையது. நான் எடுத்த பணம் இப்போதுதான் வருகிறது' எனக்கூறி, ஏ.டி.எம்.,மில் வந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டார்.
நாராயணன் மீண்டும், 10,000 ரூபாயை எடுத்துள்ளார். பரமேஸ்வரியிடம் பணத்தை கொடுத்த போது, அவர், 'இரண்டு முறை 10,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது' எனக்கூறியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாராயணன், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
***