ADDED : பிப் 27, 2024 12:25 AM
அ நிறம் | அளவு
ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளனுாரைச் சேர்ந்தவர் வளர்த்தீஸ்வரன், 26; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பழனிவேல், 45, என்பவருடன், கோவில் பதாகையில் உள்ள மதுபான கடையில் மது அருந்தினார்.
பின், கொள்ளுமேடு, கங்கை அம்மன் நகரில் உள்ள வெள்ளனுார் ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த வளர்த்தீஸ்வரன், சேற்றில் சிக்கி ஏரியில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த பழனிவேல், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர், படகில் சென்று வளர்த்தீஸ்வரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
