/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறந்த சேவை அளித்த டாக்டர்களுக்கு விருது
/
சிறந்த சேவை அளித்த டாக்டர்களுக்கு விருது
ADDED : ஜூலை 02, 2025 12:22 AM

சென்னை, 'ரோட்டரி சர்வதேச சங்கம், சென்னை - 3233' சார்பில், சமூக சேவை மருத்துவ அணி சார்பில், சிறந்த சேவை வழங்கிய டாக்டர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், ரேலா மருத்துவமனை தலைவர் முகமது ரேலா, அசாம் மாநில கச்சார் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் ரவி கண்ணன் ஆகியோருக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது.
அவசர மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன், தமிழக அரசு பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோருக்கு, 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.
குழந்தை மருத்துவ இதயநோய் நிபுணர் பிரேம் சேகர், மூத்த கண் ஆலோசகர் டாக்டர் வசுமதி வேதாந்தம் ஆகியோருக்கு, புகழ்பெற்ற மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலையில், ரோட்டரி மாவட்டம் - 3234 சார்பில், சிறந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்கினார்.
அதன்படி, சிறந்த டாக்டர்களாக, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, ரேலா மருத்துவமனை தலைவர் முகமது ரேலா ஆகியோர் பெற்றனர்.
மேலும், டாக்டர்கள் எச்.வி.ஹாண்டே, தேவிபிரசாத் ஷெட்டி, கே.ஆர்.பாலகிருஷ்ணன், மயில்வாகனன், நடராஜன் ஆகியோரும் விருது பெற்றனர்.
மேலும், சிறந்த மருத்துவமனைகள் பிரிவில், சென்னை மருத்துவ கல்லுாரி, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனைகள் விருது பெற்றன.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், ''இந்தியாவில் தலைசிறந்த டாக்டர்களை ஒரே மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களிடம் சிகிச்சை பெற, வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். இந்தியாவுக்கே மருத்துவ துறையில் வழிகாட்டும் நிபுணர்களாக விளங்கி வருகின்றனர்,'' என்றார்.
நிகழ்ச்சியில், மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மயில்வாகனன் பேசுகையில், ''ஓய்வு இன்றி, சுயநலம் இன்றி, எதிர்பார்ப்பு இன்றி, அர்ப்பணிப்போடு சேவை செய்ய வேண்டும். அந்த உன்னத பணியை ரோட்டரி சங்கம் செய்து வருகிறது,'' என்றார்.
விருது பெற்ற ராஜன் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் பேசுகையில், ''போதிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமப்புற மக்கள் கண் சார்ந்த பிரச்னைகளை சந்தித்து வந்தனர்.
''வசதியின்றி தவித்த மக்களுக்கு, ராஜன் கண் மருத்துவமனை சேவை நோக்கில் சிகிச்சைகள் வழங்கி வருகிறது,'' என்றார்.