ADDED : ஆக 16, 2026 05:52 PM

சென்னை: ‘தமிழ் படைப்பாளிகள் அறக்கட்டளை’ சார்பில், கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, மூத்த எழுத்தாளர்களுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் விழா, சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
துரை பாலசுந்தரம், சோலை ராஜேந்திரன் உள்ளிட்ட எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
மனிதன் எனும் மிருகம், நாகரிகத்தை அடைந்ததற்கு காரணம், அவனுக்கு ஒரு சொல்லை, பிறருக்கு சரியாக எடுத்து சொல்ல தெரிந்ததால் தான். மனித நாகரிகத்தின் உச்சம் தான் படைப்பாளிகள். எந்தவொரு தேசம், தனது படைப்பாளிகளை கொண்டாடவில்லையோ. அந்த தேசம் அழிந்துவிடும்.
தமிழ் உலகில் எழுத்தாளர்களுக்கு, அங்கீகாரம் இல்லை என்பது உண்மை. மலையாளத் திரையுலகில், நல்ல திரைப்படங்கள் வருவதற்கும், அவை கொண்டாடப்படுவதற்கும் காரணம், அங்கு ஒருவர் கதை எழுதுவார், மற்றொருவர் படம் இயக்குவார்.
படைப்பாளிகளின் ஆன்மாவே, அவர்களை உணர்வோடு எழுத வைக்கும். எழுத்தை விட, அவரது ஆன்மாதான் நம்மை உலுக்குகிறது.
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம், ஒரு கட்டுரையை கொடுத்தால், அது சிறப்பானதொரு கட்டுரையை வழங்கும். ஆனால், எந்தவொரு ஏ.ஐ.,யாலும், ஒரு ஆன்மா வழங்குவது போன்ற கட்டுரையை, கவிதையை வழங்கவே முடியாது.
எல்லோரும் படைப்பாளிகளாக இருக்க முடியாது. பிறரை சந்தோஷப்படுத்துவதுதான் படைப்பாளியின் வேலை. படைப்பாளிகளை உதாசீனப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர்களைக் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
