ADDED : பிப் 13, 2024 12:41 AM
மதுரவாயல், மதுரவாயல், தனலட்சுமி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சிவா, 30; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி அஞ்சலா, 27. இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது.
நேற்று வீட்டில், குழந்தையை துாங்க வைத்து அஞ்சலா குளிக்க சென்றார். அப்போது, இரண்டு நபர்கள் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல, தன் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். அப்போது, தன் உறவினரிடம் குழந்தையை கொடுத்து விட்டதாகவும், பூந்தமல்லியில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் சொன்ன முகவரி குறித்து விசாரித்தபோது, அப்படி யாரும் இல்லை என தெரியவந்தது. தொடர் விசாரணையில், குழந்தை இறந்து விட்டதால், பெருங்குடியில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அப்பெண்ணையும் அழைத்து, பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் போலீசார் குழந்தையை தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.