/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
/
'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : செப் 02, 2025 01:54 AM
சென்னை:'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடியில் கைதான நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் உட்பட ஒன்பது பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'ஹிஜாவு' நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் 4,414 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நிறுவன இயக்குநர்கள் சவுந்தரராஜன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
வழக்கில் நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் உட்பட பலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணை, 'டான்பிட்' எனும் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜன், முக்கிய நிர்வாகிகள் சந்திரசேகரன், ரவிசந்திரன், முரளிதரன், முத்துபெருமாள், கலைசெல்வி, முத்துகுமரன், செல்வம் உட்பட ஒன்பது பேர் ஜாமின் கோரியும், தலைமறைவாக உள்ள நிர்வாகி ராமராஜ் முன்ஜாமின் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், ''ஜாமின் கோரிய சவுந்தரராஜன் உட்பட ஒன்பது பேரின் ஜாமின் மனுக்கள் மற்றும் ராமராஜ் முன் ஜாமினும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
''குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் சொத்து விபரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பான எந்த விதமான உத்தரவாதத்தையும், நீதிமன்றத்தில் அளிக்காததால் தற்போதைக்கு ஜாமின் வழங்க முடியாது,'' என உத்தரவிட்டார்.