/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைமேடையில் வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்பு
/
நடைமேடையில் வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்பு
ADDED : ஜன 04, 2025 12:30 AM

ஆவடி, ஆவடி அடுத்த இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில், இரு நடைமேடை மற்றும் நான்கு இருப்பு பாதை உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆவடி வட்டாட்சியர் அலுவலகம், ஆவடி சார் - பதிவாளர் அலுவலகம் செல்வோர் என, தினமும் 30,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை, நிழற்குடை உட்பட எந்த வசதிகளும் ஏற்படுத்தவில்லை.
'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி, சில மாதங்களாக நடந்து வருவதால், ரயில் நிலையத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் இருந்து இந்து கல்லுாரிக்கு வரும் பயணியர் சிலர், அடுத்த ரயில் நிலையமான பட்டாபிராமில் இறங்கும் நிலை உள்ளது.
பெயர் பலகை வெட்டி எடுக்கப்பட்டதால், பயணியரை வழியனுப்ப வருவோர் சிலர், முதல் நடைமேடையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
இதனால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த நவ., மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, நடைமேடையில் இருசக்கர வாகனம் செல்வதை தவிர்க்க, பயணியர் நடந்து செல்லும் பாதையின் குறுக்கே, 'கான்கிரீட் ஸ்லீப்பர்' கட்டை போடப்பட்டுள்ளது.

