/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'விவேக பாரதி' சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா
/
'விவேக பாரதி' சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா
ADDED : டிச 09, 2024 03:52 AM

தி.நகர்:தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் பாடசாலையில், 'விவேக பாரதி' சார்பில், பாரதியாரின் ஜென்ம நட்சத்திர ஜெயந்தி விழா, நடந்தது.
இதில் ஹிந்து முன்னணி மாநிலத் துணை தலைவர் ஜி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பின் அவர் பேசியதாவது:
தமிழை வீட்டில் யாரும் பேசாதீர்கள். இதனால் எந்த பயனுமில்லை எனக் கூறியவர் தமிழர் தந்தையாகவும், ‛யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' எனக் கூறிய பாரதியார், வந்தேறி பார்ப்பனர் ஆகிவிட்ட காலகட்டம்.
பிற மொழி பேசும் நபர்கள் வெளியிடங்களில் சந்தித்தால், அவர்களது தாய் மொழியில் பேசுவர். ஆனால், தமிழன் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுகிறான்.
தாய் மொழி மற்றும் அதற்கான சடங்குகள், மரபுகள் நம் அடையாளம். நம் அடையாளத்தை தொலைத்தால், வருங்கால தலைமுறையினருக்கு, அவர்கள் யார் என தெரியாமல் நடுரோட்டில் நிற்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விசுவ ஹிந்து பரிஷத் அகில பாரத இணைப் பொது செயலர் கே.ஸ்தாணுமாலயன் பேசுகையில், ''பாரதி கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தத்துவஞானி. தேச பாதுகாப்பு, பக்தி குறித்து வலியுறுத்தியவர். தேசத்தைக் காக்க நம் மண், பாரம்பரியத்தை காக்க வேண்டும்,'' என்றார்.
இந்நிகழ்வில், விவேக பாரதி செயலர் மங்கையர்க்கரசி, ஒருங்கிணைப்பாளர் சந்திரமவுலி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், அபினயா குழுவினர் கச்சேரி நடந்தது.