ADDED : மார் 16, 2024 12:12 AM

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போல், காசிமேடு கடற்கரையையும் அழகுபடுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, காசிமேடு முல் எண்ணுார் தாழங்குப்பம் வரையுள்ள 5 கி.மீ., நீளத்திற்கு கடற்பகுதி அழகுபடுத்தப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ், 5.50 கோடி ரூபாயில் இப்பணிகள் நடக்கின்றன. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஜாபர்கான்பேட்டையில், 24.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 23 கடைகள் அடங்கிய மீன் அங்காடி கட்டப்பட்டு, நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சைதாப்பேட்டை எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன், இதை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
சைதாப்பேட்டை அரசு மருத்துமவனையில், 24.50 கோடி ரூபாய் மதிப்பில், பேறுகால பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பூந்தமல்லியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம், சி.எம்.டி.ஏ., நிதி 6 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மொத்தம் 3.21 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைகிறது.
பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 29 லட்சம் ரூபாய் செலவில், தாம்பரம் மாநகராட்சி ஓம் சக்தி நகர், மீனம்பாக்கம் திருவள்ளுவர் தெரு, வ.உ.சி., தெரு ஆகிய மூன்று இடங்களில், தலா, 9.70 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜையில், எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்றார்.
ஆவடியில் 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன், காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து, ஆவடி எம்.எல்.ஏ., நாசர், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்தார்.
-- நமது நிருபர் -
