/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியாணி ஹோட்டலுக்கு கொடுங்கையூரில் 'சீல்'
/
பிரியாணி ஹோட்டலுக்கு கொடுங்கையூரில் 'சீல்'
ADDED : செப் 21, 2024 12:36 AM

கொடுங்கையூர்,
கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில், 16ம் தேதி பிரியாணி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதே நாளில் பொன்னேரியில் உள்ள அதன் கிளை உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சிலரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.
இது குறித்த புகார்களை தொடர்ந்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். பின், ஹோட்டலை மூட உத்தரவிட்டனர். அதன்படி, பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் விடுமுறை என, அறிவிப்பு பலகை வைத்து மூடினர்.
தொடர் புகார்கள் எதிரொலியாக, கொடுங்கையூர், எஸ்.எஸ்.பிரியாணி உணவகத்துக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று மதியம் 'சீல்' வைத்தனர்.
மேலும், 'பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், இந்த உணவு நிறுவனம் மீது தொடர் புலனாய்வு நடப்பதால், உணவு நிறுவன செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது' என, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை 'நோட்டீஸ்' ஒட்டி உள்ளது.
செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள எஸ்.எஸ்., பிரியாணியின் மத்திய சமையல் கூடம் அமைந்துள்ளது. இங்கிருந்து கிளை உணவகங்களுக்கு பிரியாணி அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, அலமாதியில் உள்ள சமையல் கூடத்தை, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.