/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பா.ஜ., வழக்கறிஞர் கைது
/
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பா.ஜ., வழக்கறிஞர் கைது
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பா.ஜ., வழக்கறிஞர் கைது
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பா.ஜ., வழக்கறிஞர் கைது
ADDED : நவ 11, 2025 12:35 AM
செங்கல்பட்டு: பரனுார் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாக, பா.ஜ., வழக்கறிஞரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சசிகுமார், 41; பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர். இவர், செங்கல்பட்டு நகர பா.ஜ., தலைவர் மகேஸ்வரனுடன், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, காரில் சிங்கபெருமாள்கோவில் சென்றார்.
பரனுார் சுங்கச்சாவடியில், முக்கிய நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட 'பேரிகேட்' அமைக்கப்பட்ட வழியில் சென்ற போது, அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது சசிகுமாருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், சசிகுமாரை தாக்கியதாகவும், சசிகுமாரும் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்த பா.ஜ., நிர்வாகிகள், சுங்கச்சாவடி அருகே குவிந்து, பா.ஜ., வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, சசிகுமார் அளித்த புகாரின்படி, சுங்கச்சாவடி ஊழியர் கோபாலகண்ணன், 23, உள்ளிட்ட 15 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுங்கச்சாவடி நிர்வாகம் அளித்த புகாரின்படி, சசிகுமார், மகேஸ்வரன் உள்ளிட்ட, 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சசிகுமார், மகேஸ்வரன் மீது வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் - 2ல் ஆஜர்படுத்தப்பட்ட சசிகுமாரை, வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சுங்கச்சாவடி ஊழியர் கோபாலகண்ணனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

