/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., - மா.கம்யூ., கடும் வாக்குவாதம்
/
திருவொற்றியூர் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., - மா.கம்யூ., கடும் வாக்குவாதம்
திருவொற்றியூர் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., - மா.கம்யூ., கடும் வாக்குவாதம்
திருவொற்றியூர் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., - மா.கம்யூ., கடும் வாக்குவாதம்
ADDED : நவ 04, 2025 12:27 AM

திருவொற்றியூர்: வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, திருவொற்றியூரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், பா.ஜ., - மா.கம்யூ., கட்சியினரிடையே, கடும் வாக்குவாதம் நடந்தால் சலசலப்பு நிலவியது.
திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பத்மநாபன் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அனைத்து கட்சி கூட்டம், நேற்று காலை, நடந்தது.
இதில், வட்டாட்சியர் சகாயராணி, துணை வட்டாட்சியர் சோபியா, உதவி வருவாய் அலுவலர் அர்ஜூனன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் பேசியதாவது:
கே.குப்பன், அ.தி.மு.க., மேற்கு பகுதி செயலர்: நானும் பல தேர்தல்களை சந்தித்துள்ளேன். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் உள்ளது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, சிறப்பு தீவிர திருத்தம் மிக அவசியம். அதிகாரிகள் சரியாக செயல்பட வேண்டும். இரட்டை குடியுரிமை இருக்கக் கூடாது.
எங்கு வசிக்கிறார்களோ அங்கு, ஓட்டுரிமை வழங்க வேண்டும். பட்டியலில் குளறுபடி இருக்க கூடாது. கடந்த தேர்தலில், முறைகேடான ஓட்டுகள் மூலமே தி.மு.க., வென்றது.
உண்மையான வாக்காளர்களை விடக்கூடாது. போலியான வாக்காளர்களை சேர்க்க கூடாது. ஆசிரியர்கள் பணியை வரன்முறை படுத்த வேண்டும்.
கோகுல், மண்டல செயலர், நாம் தமிழர் கட்சி: பத்து ஆண்டுகளாக செய்ய முடியாததை, ஒரு மாதத்தில் அதே ஊழியர்களை கொண்டு எப்படி செய்ய முடியும்.
இதை எப்படி நாங்கள் நம்புவது. ஏற்கனவே நிறைய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், மேலும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதை எதிர்க்கிறோம். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் நிறைய பேர் உள்ளனர்.
பீஹாரில் கடந்தாண்டு ஓட்டளித்தவர், இந்தாண்டு தமிழகத்தில் ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, திருவொற்றியூர், 2 - 3 வார்டுகளில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக வடமாநில தொழிலாளர்கள் உருவெடுத்து வருகின்றனர்.
இதனால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும்.
தனியரசு, தி.மு.க., கிழக்கு பகுதி செயலர்: வாக்காளருக்கு கொடுக்கும் விண்ணப்பம் தொலைந்து விட்டால், மற்றொரு விண்ணப்பம் வழங்கப்படுமா; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்த தேர்தல் பணியாளர் தொலைத்து விட்டாலோ, ஆன்லைனின் பதிய தவறினால், எங்களுக்கு ஓட்டு கிடையாது.
அதன் பின் மேல்முறையீடு கோரி, ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அதிலும், தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டால் மட்டுமே, நாங்கள் ஓட்டளிக்க முடியும். எனவே, இந்த திட்டத்தை தி.மு.க., எதிர்க்கிறது.
ஜெயராமன், மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர்: பல தேர்தலை கவனித்து வருகிறேன். இதுவரை, எஸ்.ஐ.ஆர்., திட்டம் கிடையாது.
சுருக்கமுறை திருத்தத்திற்கும் - சிறப்பு தீவிர திருத்தத்திற்கும் என்ன வித்தியாசம். பள்ளி ஆசிரியர்கள், இந்த பணியில் ஒரு மாதம் பயன்படுத்துவதால், மாணவர்கள் பாதிக்கக் கூடும்.
சுருக்கமுறை திருத்தத்தை சரியாக செய்ய முடியாத பட்சத்தில், குறுகிய காலத்தில், சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி செய்ய முடியும்.
இதன் மூலம், தமிழர்களின் உரிமை பாதிக்கும். வடமாநிலத்திற்கு தமிழகம் அடிமை கிடையாது. தமிழகத்தில் பா.ஜ., செல்லுபடியாகாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, பா.ஜ., நிர்வாகிகள் ஜெய்கணேஷ், பிளாஸ்டிக் குப்பன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

