/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
/
ரேஷன் கடை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
ADDED : ஜன 30, 2024 12:32 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் காலடிப்பேட்டை, செட்டித் தெருவில், ரேஷன் கடையில், திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் பொருட்கள் வாங்கி வந்தனர்.
தற்போது, இந்த கடை மாட்டுமந்தை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடும்ப அட்டைத்தாரர்கள், 3 கி.மீ., துாரம் நடந்தே சென்று பொருட்கள் வாங்கி சுமந்து வருகின்றனர். முதியோர் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், ரேஷன் கடையை, தங்கள் ஊர் அருகேயே மாற்றி தர வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர் பானுமதி தலைமையில், அப்பகுதி பெண்கள், திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில், மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும், உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, சம்பவ இடத்திற்கு வந்து, உதவி கமிஷனர் தெரேசாவுடன் பேச்சு நடத்தினார். அதை தொடர்ந்து, நியாயவிலைக் கடையை அதே பகுதியில் அமைத்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்துச் சென்றனர்.