/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள் மண்டபத்தில் அடைப்பு
/
துாய்மை பணியாளர்கள் மண்டபத்தில் அடைப்பு
ADDED : ஜன 01, 2026 04:40 AM
சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு இடங்களில் உள்ள மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணாசாலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்த போலீசார், இரவு 9:00 மணிக்கு மேல் விடுவித்தனர். அதன்பின், திடீரென ரிப்பன் மாளிகை முன் அமர்ந்து துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 12:00 மணிக்கு பின், 650 துாய்மை பணியாளர்களை கைது செய்து, வெவ்வேறு மண்டபங்களில் தங்க வைத்தனர்.
போலீசார் கூறியதாவது:
போராட்டத்தில் ஈடுபடுவர்களை, 24 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். நேற்று முன்தினம் நள்ளிரவு தான் கைது செய்யப்பட்டு இருப்பதால், மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இரவில் விடுவிக்கப்படுவர். மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

