/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்களுக்காக ரத்த தான கிளப் துவக்கம்
/
நாய்களுக்காக ரத்த தான கிளப் துவக்கம்
ADDED : செப் 29, 2024 12:41 AM

மாமல்லபுரம்,
சென்னை செல்லப் பிராணிகள் மருத்துவர்கள் சங்கம் சார்பில், நாய்களுக்கென பிரத்யேக ரத்த தான கிளப் மாமல்லபுரத்தில் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் சந்தீப் இங்லே, கிளப்பை துவக்கி வைத்து சங்க மலரை வெளியிட்டார்.
இதையடுத்து, 'கிளினிக்கல் கேஸ் கன்டெஸ்ட் - 2024' போட்டி, சங்க தலைவர் பரணிதரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் 40 பேர் பங்கேற்றனர்.
அவர்கள், நோய் தாக்கிய செல்லப் பிராணிகளுக்கு அளித்த சிகிச்சை முறைகள் குறித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
நிகழ்வில் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் சந்தீப் இங்லே பேசுகையில், ''நாட்டின் பல பகுதிகளில் இருந்து செல்லப்பிராணிகளுக்கான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களின் அனுபவம், சிகிச்சை நடைமுறைகள் மற்றவர்களுக்கும் பெரிதும் உதவும்,'' என்றார்.
கவுன்சில் செயற்குழு உறுப்பினர் தணிகைவேல் பேசியதாவது:
பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள், செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளை சங்கிலி தொடராக ஏற்படுத்துகின்றன. நம் நாட்டவர் அதில் பணிபுரியும் நிலையே ஏற்படுகிறது.
நம் நாட்டவர்களும் மேம்பட வேண்டும். தற்போது செல்லப் பிராணிகளின் சந்தை மதிப்பு, 12,500 கோடி ரூபாயாக உள்ளது.
ஐந்து ஆண்டுகளில், 18,000 கோடி ரூபாயாக உயரும். செல்லப் பிராணி மருத்துவ மாணவர்களுக்கு, கிராமங்களிலும், பண்ணைகளிலுமே ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மூன்று மாத பயிற்சி அளிக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நாய் வளர்ப்பவர்களுக்காக, ரத்த தான கிளப்பின் 'வாட்ஸாப்' குழு எண் 73050 70550 வெளியிடப்பட்டுள்ளது. இக்குழுவில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் இணையலாம்.
ரத்த தானம் வழங்குவோருக்கு, நாய்களுக்கான தடுப்பூசி, மருந்து, சிகிச்சை ஆகியவை, சங்கம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என, சங்கத்தினர் தெரிவித்தனர்.