/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி குடிநீர் வினியோகத்தை குறைக்க வாரியம்...கணக்கெடுப்பு! : குழாய் இணைப்பை அதிகப்படுத்துவதில் மும்முரம்
/
லாரி குடிநீர் வினியோகத்தை குறைக்க வாரியம்...கணக்கெடுப்பு! : குழாய் இணைப்பை அதிகப்படுத்துவதில் மும்முரம்
லாரி குடிநீர் வினியோகத்தை குறைக்க வாரியம்...கணக்கெடுப்பு! : குழாய் இணைப்பை அதிகப்படுத்துவதில் மும்முரம்
லாரி குடிநீர் வினியோகத்தை குறைக்க வாரியம்...கணக்கெடுப்பு! : குழாய் இணைப்பை அதிகப்படுத்துவதில் மும்முரம்
ADDED : பிப் 26, 2024 01:10 AM

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், லாரி குடிநீர் வினியோகத்தை குறைத்து, குழாய் இணைப்புகளை அதிகப்படுத்தவும், குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, லாரிகளில் குடிநீர் வாங்கும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து கணக்கெடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னையில் 15 மண்டலங்களில், தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில், 1.8 கோடி லிட்டரும், விரிவாக்க பகுதிகளில், 1 கோடி லிட்டர் குடிநீரும், லாரி வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 425 ஒப்பந்த லாரிகளை, குடிநீர் வாரியம் நியமித்துள்ளது.
இதுபோக, விரிவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில், ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, லாரி குடிநீராக விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.
விரிவாக்க பகுதியில், குடிநீர் திட்ட பணிகள் முழுமை பெறாதது, லாரி குடிநீர் அதிகரிக்க காரணமாக உள்ளது.
முன்பு, ஏரிகளின் நீரை மட்டுமே, வாரியம் நம்பி இருந்தது. தற்போது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக, பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வினியோகிக்கும் நிலை உள்ளது. ஆனால் குழாய்கள், உந்து நிலையங்களை மேம்படுத்தி, இணைப்பு வழங்குவதை முழுமையாக்க வேண்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, குடிநீர் லாரிகளால் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பெரிய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெரும்பாலான விபத்துகள் குடிநீர் லாரிகளால் நடக்கின்றன.
முன்பு, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் பிரதான சாலைகளில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பிற்குப் பின் தளர்வு வழங்கியதால், எல்லா நேரங்களிலும் லாரிகள் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலான குடிநீர் லாரிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய செல்கின்றன.
இந்நிலையில், லாரி குடிநீர் வினியோகத்தை கணிசமாக குறைக்கவும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், லாரி குடிநீர் வாங்கும் கட்டடங்களுக்கு இணைப்பு வழங்குவதை கட்டாயமாக்க, வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, லாரி குடிநீர் வாங்கும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து துல்லியமான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தால், பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்காமல், நிலத்தடிநீர் குறைகிறது. இதனால், ஆழ்துளை கிணற்று நீர் குறைத்து ஏரி, கடல்நீரை சுத்திகரித்து பெறும் குடிநீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
லாரி குடிநீர் பயன்பாட்டை தடுத்து, அனைத்து கட்டடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வணிக பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் லாரி குடிநீர் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
முதற்கட்டமாக, விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சி பகுதியில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் வாயிலாக, லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுத்து, முழுமையான இணைப்பு வழங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

