/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணி அடித்து கொன்ற நடத்துனரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு
/
பயணி அடித்து கொன்ற நடத்துனரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு
பயணி அடித்து கொன்ற நடத்துனரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு
பயணி அடித்து கொன்ற நடத்துனரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 26, 2024 02:58 AM
அண்ணா நகர்:போதை பயணியால் அடித்துக் கொல்லப்பட்ட நடத்துனரின் உடல், உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம்.கே.பி.நகரில் இருந்து, கோயம்பேடை நோக்கி செல்லும் 'தடம் எண்: 46ஜி' மாநகர பேருந்தில், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த, சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடத்துனர் ஜெகன்குமார், 52, என்பவரை, பேருந்தில் பயணித்த, ஆம்பூரைச் சேர்ந்த கோவிந்தன், 53, என்பவர், குடிபோதையில் தாக்கினார். இதில், ஜெகன்குமார் உயிரிழந்தார்; கோவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிந்தன் மீது, கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, இறந்த நடத்துனரின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி, உறவினர்கள் நடத்துனரின் உடலை வாங்க மறுத்தனர்.
போக்குவரத்து அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு, உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
நடத்துனரின் மனைவி சோனா கூறுகையில், ''பேருந்தில் டிக்கெட் கேட்டதால், குடிபோதையில் அடித்ததால் இறந்தாக தெரிவித்தனர். கணவரை நம்பித் தான் எங்கள் குடும்பமே இருந்தது; வேறு வருமானம் கிடையாது. எங்கள் குடும்பத்தை காப்பாற்ற, எனக்கு ஒரு அரசு வேலை வேண்டும். முதல்வர் இதை கண்காணித்து நீதி வழங்க வேண்டும்,'' என்றார்.
இறந்தவரின் அண்ணன் ஜெயக்குமார் கூறுகையில், ''தம்பியை ஒருவர் அடித்தது போல் தெரியவில்லை; பலர் அடித்தது போல் காயம் உள்ளது. இதுவரை எங்களிடம் எப்.ஐ.ஆர்., காட்டவில்லை. அவரது மனைவிக்கு சொந்த ஊரிலேயே அரசு வேலையும், 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்,'' என்றார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, பெரம்பூர் மத்திய பணிமனையில், போக்குவரத்து சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நடத்துனர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டேரி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.