/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
/
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 04, 2024 04:21 AM
சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு, இ - மெயில் வாயிலாக நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, மத்திய, மாநில உளவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாதங்களாக, நாடு முழுதும் விமான நிலையங்களுக்கும், வானில் பறக்கும் விமானங்களுக்கும் மர்ம நபர்கள், இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கும், இங்கிருந்து புறப்படும் விமானம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர், மர்ம நபர்களால் பீதியில் உள்ளனர். மத்திய, மாநில உளவு போலீசாரால், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் யார் என்று கூட துப்பு துலக்க முடியவில்லை.
ஒரே நாளில், சென்னைக்கு வந்து இறங்கிய, 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் எவ்வித மர்ம பொருளும் சிக்கவில்லை.
அந்த வகையில், மூன்று நாட்களுக்கு முன் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, இ - மெயில் வாயிலாக, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர்.
அதில், விமானத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் ஒரு பகுதியை குறிப்பிட்டோ மிரட்டல் விடுக்கப்படவில்லை. இதனால், விமான நிலையம் முழுதும் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடம் மற்றும் ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, பயணியர் புறப்பாடு, சரக்கு பார்சல்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் இடம் என, எல்லா பகுதிகளிலும் சோதனை செய்தனர்.
இவர்களுக்கு பாதுகாப்பு பிரிவு போலீசார் உதவி செய்தனர். சோதனையில் மர்ம பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால், புரளி என, முடிவுக்கு வந்தனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்க மத்திய, மாநில உளவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.