/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
286 பயணியருடன் சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
286 பயணியருடன் சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
286 பயணியருடன் சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
286 பயணியருடன் சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 09, 2025 03:53 AM
சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு, நேற்று காலை வெளிநாட்டில் இருந்து, மர்ம நபர் 'இ - மெயில்' அனுப்பி உள்ளார். அதில், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விமானம் காலை 8:20 மணிக்கு தரை இறங்கும் போது, வெடித்துச் சிதறும் என, மிரட்டல் விடுத்து இருந்தார்.
இதனால், சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், அதிரடிப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள், விமானம் தரை இறங்க இருந்த இடத்தில் காத்திருந்தனர். சரியாக 8:20 மணிக்கு, அந்த விமானம், 286 பயணியருடன் தரை இறங்கிய பின், விமானம் முழுதும் சோதனை நடத்தப்பட்டது. பயணியரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, காலை 10:00 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய இந்த விமானம், 15 நிமிடங்கள் தாமதமாக, 250 பயணியருடன் புறப்பட்டுச் சென்றது.

