/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே நாளில் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ஒரே நாளில் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 10, 2025 11:51 PM
சென்னை, சென்னையில், கவர்னர் மாளிகை உட்பட 10 இடங்களுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, சில மாதங்களாக வரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து, துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், கவர்னர் மாளிகை, ஜி.எஸ்.டி., அலுவலகம், காங்கிரஸ் அலுவலகம், புதிய தலைமுறை தொலைக்காட்சி, சோழிங்கநல்லுாரில் உள்ள 'இன்போசிஸ், சென்னை ஒன்' ஆகிய ஐ.டி., நிறுவனங்கள், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம் வீடு உட்பட ஒன்பது இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, நேற்றும் 'இ - மெயில்' வந்துள்ளது.
அதேபோல், கன்டோன்மென்ட் பல்லாவரம், வெட்டர்லைன் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை தகவல் வந்தது.
அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.