ADDED : ஜன 07, 2026 05:17 AM
சென்னை: சென்னை புத்தக காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் நாளை துவங்குகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலர் வயிரவன் அளித்த பேட்டி:
சென்னையில், 49வது புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., திடலில் நாளை துவங்குகிறது. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆறு பேருக்கு கருணாநிதி 'பொற்கிழி' விருது வழங்குகிறார்.
புத்தக கண்காட்சி வரும் 21ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை செயல்படும். ஜன.,19ல், துணை முதல்வர் உதயநிதி, ஒன்பது பேருக்கு 'பபாசி' விருதுகளை வழங்குகிறார்.
நிறைவு நாளான ஜன.,21ல், உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், பதிப்புத்துறையில், 25 ஆண்டு சேவை புரிந்தோருக்கு விருதுகளை வழங்க உள்ளார். புத்தகக்காட்சிக்காக சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து, சிற்றுந்துகள் இயக்கப்படும்.
மேலும், 300 குழந்தைகள் பங்கேற்கும் 'சென்னை வாசிக்கிறது, பொங்கல் விழா, கதை எழுதுதல், கதை சொல்லுதல்' போன்ற போட்டிகள் நடக்க உள்ளன. வாசகர்கள் முதன்முறையாக அரங்கிற்கு இலவசமாக அனுமதிக்கப்படுவர். நுால்கள் 10 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
