/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தக காட்சி மேடைப் பேச்சு தொகுப்பு
/
புத்தக காட்சி மேடைப் பேச்சு தொகுப்பு
ADDED : ஜன 22, 2024 01:19 AM

புத்தகக் காட்சியில், 'காலத்தை தாண்டிய புத்தகங்கள்' எனும் தலைப்பில், சுகி.சிவம் பேசியதாவது:
நாள்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்பவரே, வாழத் தகுதியான மனிதர். மாறுவதற்குத் தயாராக இல்லாதவர் பிணத்திற்கு சமம்.
உண்மையைத் தேடி ஆராய்கிற மனப்பான்மை இன்றைய சமூகத்திடம் குறைந்துவிட்டது. பொதுப்புத்திக்கு அடிமையாகி விட்டது.
ஒரு கருத்து சரியா, தவறா என்பதை பொதுப்புத்தியில் அமர்ந்து சிந்திக்கக்கூடாது. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், முடிவெடுத்தல் என இயங்க வேண்டும். உண்மையைத் தேடும் திறன் உள்ள மனிதராக மாற வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்துக்களைத் தாங்கி வருகிற புத்தகங்களை மட்டுமே படிக்கிறவன் பைத்தியக்காரனாக மாறிவிடுவான். நமக்குப் பிடிக்காத புத்தகங்களை படிக்கும்போது தான் உண்மை என்னவென கண்டறிய முடியும்.
எதிரெதிர் புத்தகங்களை வாசிக்கும்போது தான், பொதுப் புத்தியிலிருந்து வெளியே வர முடியும். உண்மையைக் கூறும் புத்தகங்களும் சில பொய்களைச் சொல்லியிருக்கும். கவனம் தேவை.
இந்த உலகம் முரண்பாடுகளால் ஆனது. தந்தை இரணியனை எதிர்த்து நின்ற பிரகலாதனும் போற்றப்பட்டார். தந்தை தசரதனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்த ராமனும் போற்றப்பட்டார்.
யார் பலசாலி என்பதில் தான், இன்றைய மோதல் உள்ளதே தவிர, உண்மையைத் தேடுவதில் இல்லை. உண்மையா, பொய்யா என தெரியாதவற்றை மற்றவருக்கு பகிராதீர்.
காலம்தோறும் கருத்துகள் மாறும். ஆனால், உண்மை, அன்பு, கருணை, பரிவு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது. ஏனென்றால் இவை யாவும் உண்மை.
இவ்வாறு அவர் பேசினார்.