ADDED : டிச 15, 2025 03:53 AM
சென்னை: மாநகராட்சி பள்ளி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநில சிறுவன், 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், காமராஜ் தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு, மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சவுமென் பெரா, 15, என்ற சிறுவன், தன் தந்தையுடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சவுமென் பெரா, பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்து இடறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அவரது தந்தை உட்பட அங்கிருந்தோர் கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சென்ற எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
