/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தந்தைக்கு தெரியாமல் காரை இயக்கிய சிறுவன் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கி 3 பேர் காயம்
/
தந்தைக்கு தெரியாமல் காரை இயக்கிய சிறுவன் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கி 3 பேர் காயம்
தந்தைக்கு தெரியாமல் காரை இயக்கிய சிறுவன் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கி 3 பேர் காயம்
தந்தைக்கு தெரியாமல் காரை இயக்கிய சிறுவன் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கி 3 பேர் காயம்
ADDED : ஏப் 09, 2025 12:10 AM

வடபழனி,
வடபழனி, குமரன் நகர் ஐந்தாவது குறுக்கு தெருவில், நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த 'ஸ்விப்ட் டிசைர்' கார், அப்பகுதியில் நின்ற முதியவர், சாலையில் வந்த பைக், நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதியது.
இதில், தனலட்சுமி காலனி அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியான முதியவர் மகாலிங்கம், 69, படுகாயமடைந்தார்.
பைக்கில் வந்த சாலிகிராமத்தைச் சேர்ந்த 'சொமேட்டோ' ஊழியர் கங்காதரன், 49, காலில் காயம் ஏற்பட்டது. ஆட்டோவில் இருந்தவர் லேசான காயங்களுடன் தப்பினார். ஆட்டோ மற்றும் பைக் சேதமடைந்தன.
அங்கிருந்தோர், காரில் இருந்தோரை மடக்கி பிடித்தனர். இதில், காரை ஓட்டி வந்தது சிறுவர்கள் என தெரிய வர அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
வடபழனி, ராஜாங்கம் மத்திய வீதியைச் சேர்ந்த, தனியார் மருத்துவமனை ஊழியரான ஷாம், 45, என்பவர், வீட்டில் வாகன நிறுத்தம் இல்லாததால், அருகில் உள்ள குமரன் காலனி, ஏழா-வது தெருவில், தனது காரை நிறுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, தன் 14 வயது மகனிடம் கார் சாவியைக் கொடுத்து, குமரன் நகர் ஏழாவது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, கவர் போடுமாறு கூறி அனுப்பியுள்ளார். சிறுவன் தன் சக நண்பனை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார்.
அப்போது, காரில் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக ஓட்டி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது.
பின், சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து, எழுதி வாங்கி கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

