/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூச்சுத்திணறல், வாயு கசிவு, துர்நாற்றம்! மணலி 'பயோ காஸ்' ஆலையில் நள்ளிரவில் திடீர் விபத்து
/
மூச்சுத்திணறல், வாயு கசிவு, துர்நாற்றம்! மணலி 'பயோ காஸ்' ஆலையில் நள்ளிரவில் திடீர் விபத்து
மூச்சுத்திணறல், வாயு கசிவு, துர்நாற்றம்! மணலி 'பயோ காஸ்' ஆலையில் நள்ளிரவில் திடீர் விபத்து
மூச்சுத்திணறல், வாயு கசிவு, துர்நாற்றம்! மணலி 'பயோ காஸ்' ஆலையில் நள்ளிரவில் திடீர் விபத்து
ADDED : பிப் 17, 2025 01:25 AM

மணலி: மணலி பயோ காஸ் உற்பத்தி ஆலையில் நள்ளிரவில், அழுத்தப்பட்ட எரிவாயு செல்லும் குழாய், திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டு அறை தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஊழியர் பலியானார்; மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், மணலி, சுற்றுப்புற பகுதிகளில், வீடுகளில் நில அதிர்வு உணரப்பட்டு, மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
வடசென்னை மணலி, பல்ஜிபாளையம் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி, உணவு கழிவுகளை கொண்டு, பயோ காஸ் தயாரிக்கும், 'ஸ்பார்க் பயோ காஸ்' தனியார் நிறுவனத்தின், பயோ சி.என்.ஜி., பிளான்ட் உள்ளது.
இங்கு, திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் இருந்து சேகரமாகும் காய்கறி மற்றும் உணவு கழிவுகள் எடுத்து வரப்பட்டு, பயோ காஸ் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு, தொழிற்சாலையின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார், 25, என்ற லேப் டெக்னீசியனும், பொன்னேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாஸ்கர், 38, என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.
பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, இயந்திரத்தின் செயல்பாட்டை, அவர்கள் நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது, அழுத்தப்பட்ட எரிவாயு செல்லும் குழாய் அதிக அழுத்தம் ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
தீ விபத்து ஏற்பட்டதில், கட்டுப்பாட்டு அறை முழுதும் இடிந்து தரைமட்டமானது. மேலும், பக்கவாட்டு மதில் சுவரும் சேதமாகி செங்கல்கள் பறந்தன.
மற்றொரு அறையும், பயோ காஸ் தயாரிக்கும் ஆலையின் கூரையும் சேதமாகின. இந்த விபத்தில், ஓட்டுநர் பாஸ்கர், படுகாயங்களுடன் தப்பி வெளியேறினார்.
அவரை, சக ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லேப் டெக்னீசியன் சரவணகுமார், கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மணலி போலீசார் விரைந்து, மீட்பு பணிகளை மேம்படுத்தினர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன.
அதற்கு நடுவே, உடல் சிதைந்த நிலையில், சரவணகுமார் பிணமாக கிடந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே, பயோ காஸ் கட்டுப்பாட்டு அறை வெடித்ததில், நிறுவனத்தைச் சுற்றியுள்ள மணலி - பல்ஜிபாளையம், கிருஷ்ணன் தெரு, துர்கா அவென்யூ உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. துர்நாற்றம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறினர்.
நள்ளிரவில், நிறுவன வாயில் முன்பாக, அப்பகுதியினர் திரண்டதால், பதற்றமான சூழல் நிலவியது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
பயோ காஸ் நிறுவனத்தில் நடந்த விபத்து குறித்து அறிந்த திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர், சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
மணலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.வி.ஜெய்கிருஷ்ணன், 38, கூறியதாவது:
பயோ காஸ் உற்பத்தி ஆலையால், இப்பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஒரே நேரத்தில், 100 டன் காய்கறி கழிவுகள் இருந்தால் மட்டுமே, காஸ் உற்பத்தி செய்ய முடியும். இங்கு அவ்வளவு கிடைப்பதில்லை.
ஏற்கனவே, மூன்று யூனிட் இருக்கும்போது, நான்காவது யூனிட் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த விபத்தால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இல்லாததுதான் விபத்துக்கு காரணம். எங்களுக்கு, பயோ காஸ் உற்பத்தி ஆலை வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீளவில்லை
துாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வை உணர முடிந்தது. நிலநடுக்கம் வந்ததாக நினைத்து, வீடுகளை விட்டு வெளியேறி வந்து பார்த்தால், பயோ காஸ் உற்பத்தி நிலையத்தில் விபத்து என்றனர். எங்களால் நேரடியாக பாதிப்பை உணர முடிந்தது. வீட்டின் கதவு தாழ்ப்பாள் சேதமாகும் அளவிற்கு, நிலைமை இருந்தது. அதனால் ஏற்பட்ட தலைவலிகூட இன்னும் விடவில்லை.
- எம்.உஷா, 40,
ஆடை வடிவமைப்பாளர், மணலி
பயங்கர சத்தம்
நள்ளிரவு 11:00 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அனைவரும் பீதியில் வீடுகளில் இருந்து வெளியே வந்தோம். பயோ காஸ் உற்பத்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்து அங்கு சென்றபோது, எங்களை அனுமதிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இரவு முழுதும் அச்சமாக இருந்தது. இந்த உற்பத்தி மையத்தால் தொடர்ந்து துர்நாற்றம், உடல் உபாதை போன்ற பிரச்னைகள் உள்ளன.
- ஆர்.காஞ்சனா, 35,
டெய்லர், பல்ஜிபாளையம்
உற்பத்தி நிறுத்தம்
பயோ காஸ் ஆலையில் காஸ் வெடிக்கவில்லை. கட்டுப்பாட்டு அறையில் பேனல் கண்காணிப்பு பணியின்போது, விபத்து ஏற்பட்டு வெடித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. 'ஏசி' அல்லது மின்கசிவு காரணமாக இருக்கலாம். முழு விசாரணைக்குப்பின், விபத்திற்கான காரணம் தெரியவரும். கட்டுப்பாட்டு அறை மட்டுமே சேதமாகியுள்ளது. யூனிட்டுகளில் சேதம் ஏதும் இல்லை. பிரச்னை தவிர்க்க தற்காலிகமாகஉற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
- மாநகராட்சி அதிகாரி,
திடக்கழிவு மேலாண்மை
முன்பே சுட்டிக்காட்டியது
மணலி, பல்ஜிபாளையம், பயோ கியாஸ் நிறுவனத்தால், கடும் துர்நாற்றம் உள்ளது. கழிவுகள் வெளியேற்றுவதில், தனியார் நிறுவனம் மெத்தனம் காட்டுகிறது. உடனே அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி கூட்டம், மணலி மண்டல கூட்டங்களில் தொடர்ச்சியாக தெரிவித்து உள்ளேன். இரு தினங்களுக்கு முன் நடந்த, மணலி மண்டல குழு கூட்டத்தில்கூட, இதுகுறித்து தெரிவித்தேன். அதிகாரிகள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளாததால், விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீர்த்தி
காங்., கவுன்சிலர், 22வது வார்டு