/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் தனியார் வசம்
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் தனியார் வசம்
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் தனியார் வசம்
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் தனியார் வசம்
ADDED : மார் 19, 2026 05:49 AM

சென்னை: ஊழியர்கள் பற்றாக்குறையால், அண்ணா சாலையில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல்., சேவை மையத்தை, தனியாருக்கு ஒப்பந்தம்விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் டெலிகாம் நிறுவனங்களைவிட, குறைந்த விலையில் பல சேவைகளை வழங்கி வருகிறது.
எனினும் நெட்வொர்க் பிரச்னை, பழைய உட்கட்ட மைப்புடன் கூடிய டவர்கள் உள்ளிட்ட காரணங்களால், சில ஆண்டுகளாக இந்நிறுவனம் திணறி வருகிறது.
சேவை வழங்குவதில் சொதப்பல் ஒருபுறம், ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாதது போன்ற விஷயங்களால், இந்நிறுவன சிம்கார்டு பயன்படுத்தியவர்கள் பலர், தனியார் டெலிகாம் நிறுவனத்திற்கு மாறி உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையின் மிக முக்கிய வணிகப் பகுதியான அண்ணா சாலையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கி வருகிறது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பி.எஸ்.என்.எல்., இணைப்பை பயன்படுத்தும் வி.ஐ.பி.,க்கள் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், இந்த மையத்தையே பெரிதும் நம்பி உள்ளன. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வாயிலாகவே, பல சேவை வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அச்சேவைகளை, 'அவுட்சோர்ஸிங்' என்ற வெளிமுகமை வாயிலாக இயக்கப்படும் என, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சென்னை தொலைபேசி பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இனி, அண்ணா சாலை பி.எஸ்.என்.எல்., சேவை மையத்தை, தனியார் ஊழியர்கள் நிர்வகிக்க உள்ளனர். குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே, நிறுவனம் வாயிலாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகள் வழங்க முன்வராமல், 'பிரச்னை வேண்டாம்' என தனியாரிடம் ஒப்படைப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து சென்னை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், சில ஆண்டுகளாக கடும் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பணியில் இருந்த அனுபவமிக்க ஊழியர்களும், விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டனர்.
இதன் காரணமாக, அண்ணா சாலையில் உள்ள மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.
இதனால் சேவையின் தரம் பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர்கள், பிற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறும் நிலையும் ஏற்பட்டது.
இந்த சிக்கலை தீர்க்க, முதலில் பி.எஸ்.என்.எல்., நிறுவன ஊழியர்களைக் கொண்டு, சேவை மையத்தை இயக்க நிர்வாகம் விருப்பம் கோரியது. ஆனால், பணிச்சுமை மற்றும் இதர காரணங்களால் ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து தற்போது, வெளிப்படையான ஏலத்தின் வாயிலாக தனியார் நிறுவனத்திடம் இந்த மையத்தின் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் வாயிலாக, அண்ணா சாலை மையத்தில், தடையற்ற மற்றும் வேகமான சேவைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெத்தனம் காட்டும் அதிகாரிகள்
சென்னை போன்ற மெட்ரோ நகரில், மிக முக்கியமான பகுதியில் இயங்கும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, வாடிக்கையாளர் சேவை நிலைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, புதிய இணைப்புகள் வழங்குதல், சிம் கார்டு மாற்றங்கள் மற்றும் கட்டணம் வசூலித்தல் போன்ற பணிகளை, தனியார் ஊழியர்கள் மேற் கொள்ளும்போது, அதில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு காலத்தில், சென்னையின் தொலைத்தொடர்பு அடையாளமாகத் திகழ்ந்த அண்ணா சாலை அலுவலகத்தின் ஒரு பகுதி தனியார் வசம் செல்வது, வாடிக்கையாளர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

