/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பர்மா நகர் உயர்மட்ட பாலம் அமைத்தும் பலனில்லை இணைப்பு தார் சாலை வெள்ளத்தில் மூழ்குவதால் சிக்கல்
/
பர்மா நகர் உயர்மட்ட பாலம் அமைத்தும் பலனில்லை இணைப்பு தார் சாலை வெள்ளத்தில் மூழ்குவதால் சிக்கல்
பர்மா நகர் உயர்மட்ட பாலம் அமைத்தும் பலனில்லை இணைப்பு தார் சாலை வெள்ளத்தில் மூழ்குவதால் சிக்கல்
பர்மா நகர் உயர்மட்ட பாலம் அமைத்தும் பலனில்லை இணைப்பு தார் சாலை வெள்ளத்தில் மூழ்குவதால் சிக்கல்
ADDED : நவ 22, 2024 12:11 AM

மணலி,மணலி, 16வது வார்டு, பர்மா நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள், பர்மா நகர் பிரதான சாலை வழியாக, 1,650 அடி துாரம் பயணித்து, புழல் உபரி கால்வாயை கடக்கும் விதமாக இருந்த, இரும்பு பாலத்தை கடந்து, மணலி விரைவு சாலைக்கு செல்ல வேண்டும்.
புழல் ஏரியில் உபரிநீர் திறக்கும்போது, பர்மா நகர் இரும்பு பாலம் வெள்ளநீரில் மூழ்கி, போக்குவரத்து அடியோடு பாதிக்கும் நிலை இருந்தது. மாற்றாக, பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில், 2018ம் ஆண்டு, உள்ளாட்சி மானிய கோரிக்கையில், புழல் உபரி கால்வாயை கடக்கும் வகையில், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயில், பர்மா நகர் ஆகிய மூன்று பகுதிகளில், 44.25 கோடி ரூபாய் செலவில், புதிய உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என, அறிவிப்பு வெளியானது.
அதன்படி, பர்மா நகர் உயர்மட்ட பாலம், 15 அடி உயரம், 328 அடி நீளம், 35 அடி அகலத்தில் கட்டி திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், புழல் உபரி கால்வாயில் வெள்ள நீர் ஆர்ப்பரித்தாலும், பர்மா நகர் மக்கள் உயர்மட்ட பாலம் வழியாக, நீர் நிலையை கடக்க முடிகிறது.
ஆனால், உயர்மட்ட பாலம் முதல் பர்மா நகர் குடியிருப்புகள் வரையிலான, பிரதான தார் சாலையை வெள்ளநீர் மூழ்கடித்து செல்வதால், பாலம் அமைத்தும் பலனில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் பெய்த கனமழையின் போது கூட, புழல் உபரி கால்வாயில் ஆர்ப்பரித்த மழைநீரில், பர்மா நகர் இணைப்பு தார் சாலை, 700 அடி துாரத்திற்கு, முற்றிலுமாக மூழ்கடித்துச் சென்றது.
இதன் காரணமாக, சைக்கிள், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியவில்லை. மேலும், பாதசாரிகள் நடந்து செல்லும் போதும், வேகமாக ஓடும் தண்ணீரில் அடித்துச் செல்லும் அபாயமும் உள்ளது.
எனவே, இணைப்பு சாலையை உயர்த்தி, இருபக்கமும், கான்கிரீட் கைப்பிடிகள் அமைத்துக் கொடுத்தால், வெள்ளநீர் ஆர்ப்பரித்தாலும், நடந்து செல்ல முடியும் என, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.