/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கதவை மூடியதால் ஆத்திரம் பஸ் ஓட்டுநருக்கு 'பளார்'
/
கதவை மூடியதால் ஆத்திரம் பஸ் ஓட்டுநருக்கு 'பளார்'
ADDED : நவ 05, 2025 01:26 AM
ஏழுகிணறு: சக பணியாளருக்கு பேருந்தை நிறுத்தாமல் கதவை மூடிய ஆத்திரத்தில் ஏற்பட்ட தகராறில், பேருந்து ஓட்டுநரை பெண் துாய்மை பணியாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது, சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை, மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் துாய்மை பணியாளர்கள் 10 பேர், நேற்று திருவேற்காடு செல்லும் தடம் எண்: 59 பேருந்தில், வள்ளலார் நகரில் இருந்து ஏறினர்.
அப்பேருந்தில் ஏறுவதற்காக சக பணியாளர் ஒருவர் ஓடி வந்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநரான, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 43, என்பவர், கதவை மூடி பேருந்தை இயக்கி உள்ளார்.
சக பணியாளரை ஏற்றாத ஆத்திரத்தில், பேருந்தில் இருந்த பணியாளர்கள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே, பணியாளர் ஒருவர் ஓட்டுநரின் கன்னத்தில் 'பளார்' என அடித்துள்ளார்.
இதையடுத்து, வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருப்பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஏழுகிணறு போலீசார், பேருந்தை பேசின் பாலம் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் பேச்சை அடுத்து, இரு தரப்பும் சமாதானமாகி சென்றனர்.

