/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீயம்பாக்கத்திற்கு நீட்டித்த பஸ் சேவை 'தனி நபருக்காக' ஒரே நாளில் நிறுத்தம்?
/
தீயம்பாக்கத்திற்கு நீட்டித்த பஸ் சேவை 'தனி நபருக்காக' ஒரே நாளில் நிறுத்தம்?
தீயம்பாக்கத்திற்கு நீட்டித்த பஸ் சேவை 'தனி நபருக்காக' ஒரே நாளில் நிறுத்தம்?
தீயம்பாக்கத்திற்கு நீட்டித்த பஸ் சேவை 'தனி நபருக்காக' ஒரே நாளில் நிறுத்தம்?
ADDED : செப் 06, 2025 02:38 AM
மணலி :பயணியரின் கோரிக்கையை ஏற்று, பிராட்வே - மணலி தீயம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவை, தி.மு.க., பகுதி நிர்வாகி ஒருவரின் துாண்டுதலை அடுத்து, ஒரே நாளில் நிறுத்தப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிராட்வேயில் இருந்து மணலி தீயம்பாக்கம் வரை, தடம் எண் 64டி மாநகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து சேவை, கடந்த 2011ம் ஆண்டிற்கு பின் கொசப்பூருடன் நிறுத்தப்பட்டது. இதனால், காந்தி நகர், தியாகி விஸ்வநாததாஸ் நகர், சென்றம் பாக்கம், பெரியார் நகர் மற்றும் தீயம்பாக்கம் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பஸ் சேவை, தீயம்பாக்கம் வரை நேற்று முன்தினம் நீட்டிக்கப்பட்டது. இதை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:30 மணியளவில் பேருந்தை மறித்து, 'தீயம்பாக்கம் வரை சேவையை நீட்டிக்கக்கூடாது' எனக்கூறி, கொசப்பூர் சாலை சந்திப்பில் சிலர் மறியலில் ஈடு பட்டுள்ளனர்.
கொசப்பூர் தி.மு.க., பகுதி நிர்வாகியின் துாண்டுதலால், இந்த மறியல் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார், பிரச்னையை சமாளிக்க நீட்டித்த பேருந்து சேவையை, ஒரே நாளி ல் நிறுத்தியுள்ளனர். அதன்பின், பழையபடியே கொசப்பூருடன் சேவை நிறுத்தப்பட்டது.
பயப்படும் அதிகாரிகள் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'மக்களுக்காக அரசு செய்த நற்செயலை, தி.மு.க., நிர்வாகி ஒருவரே சுயநலத்திற்காக, அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி மறியலில் ஈடுபடுத்தி, பேருந்து சேவையையும் நிறுத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் சிறு நிர்வாகிக்கே பயந்து, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்' என்றார்.