/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது விற்கலாம்; பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்விக்கு அரசு ஆட்சேபம் பட்டாசு கடை
/
மது விற்கலாம்; பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்விக்கு அரசு ஆட்சேபம் பட்டாசு கடை
மது விற்கலாம்; பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்விக்கு அரசு ஆட்சேபம் பட்டாசு கடை
மது விற்கலாம்; பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்விக்கு அரசு ஆட்சேபம் பட்டாசு கடை
ADDED : அக் 18, 2024 12:28 AM
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில், அக்., 18 முதல் நவ., 1 வரை பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கான, 'டெண்டர்', செப்., 13ல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக 'டெண்டர்' வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு எதிராகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும் வெளியிடப்பட்ட இந்த டெண்டர் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க நிர்வாக தலைவர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தீவுத்திடல் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், 'நீதிமன்றத்தில் யாருக்கும் டெண்டர் வழங்கவில்லை என, கடந்த 15ல் அரசு தெரிவித்தது.
ஆனால், 14ம் தேதியே டெண்டரை வழங்கிவிட்டு, 10ம் தேதியே அதற்கான தொகையை பெற்றுவிட்டதாக, சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''டெண்டர், ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
அதற்கு, டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என்று ஏன் தெரிவிக்கப்பட்டது? மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''வழக்குக்கு தேவை இல்லாததை, நீதிமன்றம் கூற வேண்டாம். போதிய காரணமின்றி, அரசையும் குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறும்போது, மவுனமாக இருக்க முடியாது,'' என்றார்.
அதற்கு, தனி நபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே பேசுவதாக கூறிய நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுற்றுலா துறை செயலர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.