ADDED : நவ 17, 2026 06:31 PM
புழல்: புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா வழங்க முயன்றதாக, சிறை காவலர் கனகராஜ், 50, என்பவரை போலீசார் இன்று (நவ.,17) கைது செய்தனர்.
புழல் சிறையில் 3,500க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள விசாரணை சிறையின் மருத்துவப் பிரிவில், மருத்துவருக்கு உதவியாளராக சிறைக் காவலர் கனகராஜ் பணியாற்றி வந்தார்.
இவர் வெளியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்காணித்த சிறை போலீசார், கனகராஜை கையும் களவுமாகப் பிடித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறை அதிகாரி அளித்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்று அவரை கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர் பணியாற்றிய புழல் சிறையிலேயே கைதியாக அடைத்தனர்.
