ADDED : ஏப் 03, 2025 12:44 AM
புழல், புழல் சிறையில் 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும், சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மொபைல்போன் உள்ளிட்டவையும் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மாலை சிறையின் வெளியே உள்ள சுற்றுச்சுவர் அருகில் பந்து வடிவிலான ஒரு பொருள் கிடப்பதை பார்த்த சிறை காவலர் ஒருவர், அதை பிரித்து பார்த்தபோது, அதில் 18 கிராம் கஞ்சா இரண்டு லைட்டர்கள் மூன்று பீடி கட்டுகள் இருந்தன. இது குறித்து, சிறை அதிகாரி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில், ஜி.என்.டி., சாலையில் இருந்து பைக்கில் சென்ற இருவர், போதைப் பொருட்களை சிறைக்குள் வீசியது தெரிய வந்துள்ளது. கண்காணிப்பு கேமரா உதவியுடன், போதைப்பொருட்கள் வீசிய நபர்களை புழல் போலீசார் தேடி வருகின்றனர்.

